மரணம் ஒரு மகத்துவம்.


மரணம்.

இது மண்ணில் பிறந்த அனைத்து உயிர்க்கும் மற(று)க்காமல் தரப்படும் சன்மானம். இது ஒரு சமத்துவ சத்திரம். பேதமில்லா பெருவாழ்வு. மரணம் கண்டு அஞ்சாதோர் எவரும் இல்லை. ஆனால் அந்த பயம் தேவையில்லை. தினமும் ஏற்படும் உடல் இயக்கங்களில் தோன்றும் பசி, உறக்கம், பாலுணர்வுபோல் ஒருமுறை வருகின்ற பிறப்புபோல் ஒரே முறை வரும் ஒரு கட்டாய நிகழ்வுதான் மரணம்.

உயிர்(ஆத்மா) தங்கியிருக்கும் உடல் வீட்டின் குத்தகை முடியும் நிலைதான் மரணம். இந்த வாழ்க்கை வீதியில் யாருக்கும் சொந்த வீடு விற்கப்படுவதில்லை. எல்லோரும் வடக்கை வீட்டுக்காரரே... அவரவர் தன்மைக்கேற்ப வாடகைகாலம் நீட்டிக்கப்படுகிறது. இதில் என்ன ஒரு புதுமை என்றால் ஒருவர் எத்தனை வீடு வேண்டுமானாலும் மாறிக்கொள்ளலாம். ஆனால் ஒரு வீட்டில் ஒருவர் மட்டும்தான் ஒருமுறை மட்டும்தான் வசிக்கமுடியும். மற்றொருவருக்கு மீண்டும் புது வீடுதான். . . .


பசிவந்தால் உண்கிறோம். உண்டதும் அதன் சுவை உணர்ந்து மகிழ்ந்து அவ்வுணர்வை ஏற்றுக்கொள்கிறோம். மீண்டும் எதிர்பார்க்கிறோம். உறக்கம் வந்தாலும் அப்படித்தான்... ஆனால் மரணம் மட்டும் மனிதனால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை. மனிதனால் மட்டுமல்ல சராசரியாக பார்த்தால் எந்த உயிர்க்குமே பயம்தான் . காரணம் என்ன தெரியுமா ? மரணம் ஒரு இழப்பு. நாம் சராசரியாய் செய்கின்ற ஒரு செயலின் நிரந்திர தடை.

எந்த உயிரும் மரணத்தை கண்டு பயப்படுவதே இல்லை. ஆனால் உயிர்களின் ஆற்றாமை பிரிவு ஒன்றே... மரணம் தருகின்ற பிரிவைகண்டுதான் யாருக்கும் பயம். ஒரே முறை வருகின்ற பிறப்பை ஏற்கும் நம்மால் ஒரே முறை வருகின்ற மரணம் மட்டும் ஏற்க மனம் இல்லை. காரணம் மரணம் நம் வாழ்நாள் காலத்தின் மொத்த நிகழ்வுகளையும் நம் ஞாபகத்தில் இருந்து அழித்துவிடுகின்ற, அகற்றிவிடுகின்ற ஓர் ஞாபக மறதி.

ஒருவனுக்கு அவனது மறுபிறவியில் முதற்பிறவியின் ஞாபகங்கள் வருமென்றால் கட்டாயமாக மரணம் பற்றிய பயம், சோகம் நம்மிடையே இருக்காது என்பதே உண்மை. மரணம் மறுக்கும் செயல்மாறி அனைவரும் மரணத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்வர். இன்னும் கூடுதலாக வயோதிகம் வரும்முன்பகவே தற்கொலைகூட செய்துகொள்வார்கள். ஏனென்றால்... மறுபிறவியில் நாம் யார் என்று நமக்கு தெரியும். மீண்டும் பிறந்து இளமை உடலுடன் மீண்டும் பழைய வாழ்கையை வாழலாம். பிடிக்கவில்லை என்றால் புதுவாழ்க்கையை வாழலாம். இப்படி பல வசதிகள் இருப்பதால் மரணம் எல்லோருக்கும் பிடித்த ஒன்றாக மாறிவிடும். இப்போது சொல்லுங்கள் மரணம் ஒரு சோகமா ? மரணம் வேண்டாத ஒன்றா? மரணம் கண்டு பயம் தேவையா?


எங்கோ ஒருவருக்கு யாரோ ஒருவருக்கு சென்ற பிறவியின் ஞாபகம் வருவதாக கேள்விபடுகிறோம். அந்த ஒருவருக்கு மட்டும் எப்படி அது சாத்தியமாகிறது? நிச்சயம் அதற்கு ஒரு வழி இல்லாமல் இல்லை. அதை அறிந்தவர் சொல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது அந்த சக்தி அடைந்தவர்கள் அதை எப்படி அடைந்தோம் என்பதை அறியாமல் எதேர்ச்சையாக அந்த செயலை செய்து அந்த சக்தியை பெற்றிருக்கலாம். அவருக்கு அந்த மாற்றம் எப்படி வந்ததென்பதை விஞ்ஞானமும் மெய்ஞானமும் சேர்ந்து முயற்சித்தால் ஒருவேளை கண்டுணரலாம். அது இப்போதே நமக்கு உதவாதபோதும் நம் சந்ததியினருக்கு (நமது அடுத்த பிறவியாககூட இருக்கலாம்) கிடைக்கலாம். நிச்சயம் நடக்கும்.


மறுபடி சொல்லுகிறேன். . . மரணம் பயப்படும் ஒரு நிலை அல்ல. . . பயணப்படும் புனித நிலை. ஒரே இடத்தில் தேங்கி இருக்கும் நீர் நிச்சயம் சாக்கடையாக மாறிவிடும். ஓடிக்கொண்டிருக்கின்ற ஆற்று நீரோ இனிமையாகவும் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் இருக்கும். அதுபோலதான் உயிரும் இடம் மாறும்போது அதன் சக்தி மேம்பட்டதாக இருக்கும். மரணம் என்பது மரிப்பது அல்ல . உயிர் மீண்டும் பிறக்க விதைப்பது.

இனியேனும் மரணபயம் தவிர்த்து மரணம் வரும்போது வரட்டும் என்று காத்திருப்போம். அதுவரைக்கும் இந்த உயிருக்கு தேவையான அனுபவங்களை வாழ்வதன் மூலமாக சேர்த்துக் கொண்டிருப்போம்.

"மரணம் " இதை இமைமூடி மனம் ஒருநிலைப்படுத்தி ஒருமுறை, சிலமுறை, பலமுறை மௌனமாய் உச்சரித்துப்பாருங்கள். மரணம் உங்கள் தெய்வநிலை என்பதை நிச்சயம் உணரலாம்.

6 comments:

அன்புடன் மலிக்கா said...

மரணம் எந்நிலையிலும் ஏற்படுமென்ற எண்ணம்
என்றும் நம்முள் இருக்குமேயானால்
எள்ளளவும் பாவம்செய்ய துணியமாட்டோம்.
துணிந்தபோதும் தொடரமாட்டோம்.

மிக அருமையான பதிவு தொடர்ந்து எழுதுங்கள்.

http://fmalikka.blogspot.com/2010/04/9.html

http://niroodai.blogspot.com

ARANTHAIRAJA said...

நன்றி தோழியாரே . . . உங்களைப்போன்றோர் ஆதரவும் அறிவுரைகளுமே எமைப்போன்றோரின் வளர்ச்சி.

சசிகுமார் said...

நண்பா கலக்கல் பதிவு, அருமையாக உள்ளது நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

நண்பா word verification நீக்கவும்

ARANTHAIRAJA said...

நன்றி நண்பரே...

Word verification-நீக்கிவிட்டேன் தோழரே.

erodethangadurai said...

நல்ல கருத்துக்கள் .. வாழ்த்துக்கள் ...! அப்புறம் .. ஜெயா டிவி - ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் .. கொஞ்சம் வந்து பாருங்கள்... ! http://erodethangadurai.blogspot.com/

Post a Comment